சபாவில் இந்தாண்டு ஜூலை 2 ஆம் தேதி வரை 1,791 டிங்கி காய்ச்சல் வழக்குகள் பதிவு

கோத்தா கினாபாலு, ஜூலை 18 :

சபாவில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 887 டிங்கி காய்ச்சல் வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு ஜூலை 2ஆம் தேதி நிலவரப்படி 1,791 டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக சபா மாநில சட்டசபையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சபா சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் டத்தோ ஷாஹெல்மே யாஹ்யா கூறுகையில், இந்த எண்ணிக்கை 101.9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதைக் கருத்தில் கொண்டு மாநில சுகாதாரத் துறை இந்த நிலைமையைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

“டிங்கி காய்ச்சல் வழக்குகளைக் கையாள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான வளாகங்களில் ஆய்வுகள் செய்தல், புகை தெளித்தல், கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்டறிந்து அகற்றுதல் மற்றும் ஒவ்வொரு நோய் அல்லது கிளஸ்டருக்கும் சுகாதாரக் கல்வி உட்பட வழக்கு கண்காணிப்பு போன்ற டிங்கி நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தீவிரமாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

“JKNS ஜூன் 25, 2022 அன்று ‘Mega Negeri Sabah’ எனும் சிரமதான நடவடிக்கைகளை (gotong royong) செயல்படுத்தியது, மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 30 சிறிய அளவிலான சிரமதான நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டன,” என்று அவர் ஹியூ வுன் ஜின் (வாரிசன்- கரமுண்டிங்) டிங்கி நோயைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகள் தொடர்பில் வினவியபோது, பதிலளித்தார்.

மேலும் 192,967 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு ஏடிஸ் கொசுக்கள் பெருகும் இடங்கள் தொடர்பில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஷாஹெல்மே கூறினார்.

கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடங்களைக் கண்டறிந்த வளாகங்களின் உரிமையாளர்களுக்கு, நோய் தாங்கும் பூச்சிகளை அழிக்கும் சட்டம் 1975 (சட்டம் 154) இன் கீழ் மொத்தமாக 567 அபராதங்கள் வழங்கப்பட்டன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here