பாடாங் தேராப், ஜூலை 20 :
இங்குள்ள ஜாலான் கோலா நெராங் – கம்போங் சுங்கை காப் என்ற இடத்தில் நேற்று, அவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா விபத்தில் சிக்கியதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு ஆசிரியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனையில் (HSB) அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுடைய நபர் உயிரிழந்தார் என்று, பாடாங் தேராப் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் முல்கியாமன் மன்சார் தெரிவித்தார்.
நேற்று காலை 8 மணியளவில், பெண் பயணி ஒருவருடன் ஆடவர் ஒருவர் ஓட்டிய நிசான் அல்மேராவுடன், பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா சம்பந்தப்பட்ட விபத்து நடந்தது.
ஆசிரியர் அப்பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து செக்கோலா கெபாங்சான் (SK) நமியில் உள்ள தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
“இரு வழியும் நேராக இருந்த சாலையில் சம்பவ இடத்திற்கு வந்தபோது, முன்பக்கத்திலிருந்து வந்த 25 வயது இளைஞர் ஓட்டிவந்த நிசான் அல்மேரா கார், பாதிக்கப்பட்டவரது பெரோடுவா பெஸ்ஸா கார் பயணித்த பாதையில் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
“இதன் விளைவாக, இரண்டு வாகனங்களின் முன்பகுதியில் மோதல் ஏற்பட்டது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
நேற்று காலை 11.35 மணிக்கு HSB-யில் இருந்து அழைப்பு வந்த பிறகு, பெரோடுவா பெஸ்ஸா ஓட்டுநர் இறந்துவிட்டதாக முல்கியாமன் கூறினார்.
நிசான் அல்மேராவின் ஓட்டுநருக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டதாகவும், அவர் HSB-யில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயமடைந்த 19 வயது பெண் பயணியின் காலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் கோலா நெராங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.