ரவூப், ஜூலை 23 :
ஃபெல்டா டெர்சாங் 01 இல் உள்ள மளிகைக் கடையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கொள்ளைக்காரன் தாக்கியதில் 40 வயது இந்தோனேசியப் பெண் தலை மற்றும் முகத்தில் காயமடைந்தார்.
ரவூப் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் காமா அசுரல் முஹமட் கூறுகையில், இந்த சம்பவத்தில், கொள்ளையக்காரன் கடைக்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அவர் கூறுகையில், ஃபெல்டா டெர்சாங் 01 இல் உள்ள ஒரு மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் செரோஹ் காவல் நிலையத்திற்கு பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்தது.
மேலும் “தலை மற்றும் முகத்தில் காயமடைந்த ஒரு பெண் உதவி கேட்டு வருவதாக எங்களுக்கு (காவல்துறைக்கு) தகவல் கிடைத்தது,” என்று அவர் கூறினார்.
சிறிது நேரத்தில் அவரது குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு காயங்களுக்கு உள்ளான பெண் மளிகைக் கடையில் உதவியாளராக இருந்ததை முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்ததாக காமா அசுரல் கூறினார்.
“அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கூரையின் மீது ஏறி கடைக்குள் நுழைந்ததாக பாதிக்கப்பட்டவர் கூறினார். சந்தேக நபர் இரும்பு ஆயுதம் ஏந்தியிருந்தார் என்றும் அவர் அப்பெண்ணை தாக்கி அவரது தலை மற்றும் முகத்தில் காயங்களை ஏற்படுத்தினார்.
“சந்தேக நபர் வளாகத்தில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை கைப்பற்றுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரின் கைகளை டேப்பைப் பயன்படுத்தி கட்டினார். பின்னர் அவர் (சந்தேக நபர்) தப்பிச் செல்வதற்கு முன்பு அவ்வளாகத்திற்கு தீ வைத்தார்,” என்று அவர் கூறினார்.
அதன்பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொதுமக்களிடம் உதவி கேட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.
கடை கவுண்டரில் இருந்த RM1,700 ரொக்கம் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்த இரண்டு தங்க வளையல்களை கொள்ளையடித்தவர் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக அவர் மேலும் கூறினார்.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 394/435 இன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று அவர் கூறினார்.