உணவு விநியோக விவகாரங்களை சரி செய்ய அரசாங்கம் முனைகின்றது பிரதமர் உறுதி

கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி கோவிட்-19 தொற்றுப் பரவல், பருவ நிலை மாற்றம் காரணத்தினால் ஏற்பட்ட நாட்டின் பொருளாதாரம் தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கையின் காரணமாக மீட்சிப் பெற்று வருகின்றது என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
உலகளாவிய உணவு விநியோக சங்கிலியில் பிரச்சினைகள் எழுந்திருந்தபோதிலும், பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் உணவு விநியோகக் கட்டுப்பாட்டை நிர்வகிக்க அரசாங்கம் முனைப்புக் காட்டி வருவதாக நேற்று செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மஹா என்று அழைக்கப்படும் 2022 விவசாயம், தோட்டக் கலை, விவசாய சுற்றுலா கண்காட்சியின் தொடக்க விழாவில் அவர் உரையாற்றினார்.


குறிப்பாக, விவசாயத் துறை உணவு விநியோகச் சங்கிலியில் பொருட்களின் விலை உயர்வு சூழலை உருவாக்கக்கூடிய காட்டல், மத்திய நபர் போன்ற விவகாரங்களை எதிர்கொள்ளவும் அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
சந்தையில் பொருட்களின் விலையை ஆக்கிரமிப்புச் செய்ய முயலும் கும்பல்களுக்கு அரசாங்கம் நேரடியாக எச்சரிக்கை விடுக்கின்றது.
நாட்டின் உணவு விநியோகப் பாதுகாப்பினை வலுப்படுத்த அரசாங்கம் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
குறிப்பாக, கோழி இறைச்சி ஏற்றுமதிக்கான தடையும் இதில் அடங்கும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.


நடைபெற்ற இந்த மாநாட்டு தொடக்க விழாவில் விவசாயம், உணவு தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியான்டி உள்ளிட்ட அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், உள்நாட்டு விவசாய துறையின் பிரகாசமான எதிர்காலத்திற்கு முக்கிய வழிகாட்டியாக இந்த மஹா கண்காட்சியும் அமைவதாக டாக்டர் ரொனால்ட் கியான்டி கூறினார்.
இந்த மஹா கண்காட்சி இந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதிவரை 11 நாட்களுக்கு நடத்தப்படுகின்றது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி நேரடி- ஆன்லைன் என இருவகைகளில் நடத்தப்படுகின்றது.
இவ்வாண்டு மஹா கண்காட்சி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வருகையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here