இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி- மற்றொருவர் படுகாயம்

கெப்பாலா பத்தாஸ், ஆகஸ்ட் 15 :

இன்று திங்கட்கிழமை, காலை இங்குள்ள ஜாலான் பெர்மாடாங் பெர்டாம் என்ற இடத்தில் நடந்த விபத்தில், அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

காலை 8.05 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக செபராங் பிறை உத்தரா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ராட்ஸி அகமட் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் அவருக்கு முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது, 18 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

“மோதலின் விளைவாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் சாலையில் தூக்கி எறியப்பட்டார், மற்றவர் வடிகாலுக்குள் விழுந்தார், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

“பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக கெப்பாலா பத்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் இறந்தவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது ,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (APJ) 1987 இன் பிரிவு 41 (1) இன் படி மேலும் விசாரணைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முகமட் ராட்ஸி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here