கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 :
2022 தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, LRT , MRT மற்றும் மோனோரெயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் டத்தாரான் மெர்டேக்காவிற்கான பயணங்களை தொடங்கும் என்று Rapid KL இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் ரயில் சேவையின் அதிர்வெண் தேவைகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
“அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் LRT, கெலானா ஜெயா LRT, KL மோனோரெயில், கஜாங் MRT மற்றும் புத்ராஜெயா MRT ஆகிய ரயில் சேவைகள் முன்கூட்டியே தொடங்கும் என்றும் “அன்றைய தினம் டத்தாரான் மெர்டேக்காவிற்குச் செல்ல விரும்பும் நகரவாசிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்றும் அது கூறியது.
இதற்கு முன், டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயா கூறுகையில், டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறும் தேசிய தின விழாவில் கலந்துகொள்பவர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறும் அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.