2023 -க்கான வரவுசெலவு திட்டம் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுவது, அரசாங்கம் அம்னோவின் அழுத்தத்தில் இருப்பதைக் காட்டுகிறது என்கிறார் அன்வார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 :

2023-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுவதற்கான அரசாங்கத்தின் முடிவு, பிரதமர் அம்னோவின் பெரும் அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறியாகும் என்று பக்காத்தான் ஹரப்பான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனேவே அட்டவணைப்படுத்தப்பட்ட தேதியை மூன்று வாரங்களுக்கு முன்னோக்கி நகர்த்துவது என்பது ஒரு அசாதாரண நடைமுறை அல்ல என்று அவர் கூறினார், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அம்னோ தலைமையின் வலுவான அழுத்தத்தை எதிர்கொள்கிறார் என்பது வெளிப்படையான இரகசியமாகிவிட்டது என்று இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட காணொலியில் அன்வார் கூறுனார்.

மேலும் “முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத, அம்னோ தலைமையின் கட்டைவிரலின் கீழ் இருக்கும் ஒரு பிரதமர் எங்களிடம் இருக்கிறார்” என்று அவர் அக்காணொலியில் தெரிவித்தார்.

பட்ஜெட் தயாரிக்கும் பணியின்போது, வரிவிதிப்பு, செலவுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற பல முக்கிய விஷயங்களில் பக்காத்தான் ஹராப்பானுடன் (எதிர்க்கட்சியுடன்) கலந்தாலோசிப்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

“ஆனால் அந்த நடைமுறை இன்னும் தொடங்கப்படவில்லை, இதன் பொருள் அவர்கள் வரவுசெலவு திட்டத்தை அமல்படுத்துவதில் அவசரத்தில் உள்ளனர். பொதுத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதைத் தீர்மானிக்க பிரதமருக்கு இடமளிக்கும் வகையில் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கருதப்படுகிறது,” என்று அன்வார் கூறினார்.

ஊழலை ஒழித்தல், நல்லாட்சி, கல்வி சீர்திருத்தங்கள், பொது சுகாதாரம், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பெரும் வெள்ளம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய ஒரு அரசாங்கம் மக்களுக்குத் தேவை என்றும் அன்வார் மேலும் கூறினார்.

அம்னோ துணைத் தலைவருமான பிரதமர் இஸ்மாயில் சப்ரி, நாடாளுமன்றத்தை விரைவில் கலைத்து, 15ஆவது பொதுத் தேர்தலை (GE15) அனுமதிக்கும் வகையில், 2023-க்கான வரவுசெலவு திட்டத்தை அக்டோபர் 28ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக பல ஊகங்கள் பரவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here