பாலிங், செப்டம்பர் 1 :
கடந்த ஜூலை மாதம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கிம் குபாங்கில் உள்ள கம்போங் இபோயை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று பார்வையிட்டார். அத்தோடு பாலிங் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,012 பேருக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) வழங்கிய நிதி உதவியை பிரதமர் இன்று வழங்கினார்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த விஜயத்தில், பிரதமருடன் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சானுசி முகமட் நோர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மஹ்ட்ஸீர் காலிட் மற்றும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் ஆகியோர் உடனிருந்தனர்.
நண்பகல் 12.30 மணிக்கு பாலிங்கை வந்தடைந்த பிரதமர், கம்போங் இபோய் மற்றும் கம்போங் மஸ்ஜிட் இபோய் இடையே இடிந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக பொதுப்பணித்துறை மற்றும் மலேசிய ஆயுதப்படைகளால் கட்டப்பட்ட 27.43 மீட்டர் நீளமுள்ள பெய்லி பாலத்தை பார்வையிட்டார்.
இஸ்மாயில் சப்ரியின் வருகை கிராமவாசிகளுக்கு மிகுந்த ஆனந்தத்தையளித்தது. அவர்கள் பிரதமருடன் அளவளாவியும் செல்ஃபி எடுக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினர்.
மேலும் குபாங்கின் தெலுக் டுரியானில் நடந்த 65வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ‘டோவா சிலாமாட்’ நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் தலா RM1,000 பெற்றனர்.
வெள்ளம் ஏற்பட்ட போது தான் துருக்கியில் இருந்த போதிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,500 பேருக்கு தலா RM1,000 பண உதவியை வழங்குவதற்காக தனது அரசியல் செயலாளரை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக பிரதமர் கூறினார்.
மூன்று மணிநேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளம், மூன்று உயிர்களைக் காவுகொண்டது, 15 குடும்பங்களை வீடற்றவர்களாக மாற்றியிருந்ததுடன் பல ஆயிரக்கணக்கானோரை பாதித்திருந்தது நினைவுகூரத்தக்கது.