சிங்கை துணைப் பிரதமர் மலேசியாவிற்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ வருகை

செப்பாங், செப்டம்பர் 4 :

சிங்கப்பூர் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இங்கு வந்தடைந்தார்.

ஜூன் 2022 இல் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு, மலேசியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.

சிங்கப்பூரில் இருந்து வணிக விமானம் மூலம் பறந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) வந்தடைந்த அவரை, மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் நெறிமுறைத் தலைவர் முகமட் ஐனி ஆடான், மலேசிய அரசின் விழாத் தலைவர் டத்தோ ரோசைனோர் ரம்லி மற்றும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதுவர் வானு கோபால மேனன் ஆகியோர் வரவேற்றனர்.

ரோயல் ரேஞ்சர் படைப்பிரிவின் முதல் பட்டாலியனைச் சேர்ந்த 32 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

வோங்கின் இந்த விஜயத்தின் போது, ​​ இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் மற்றும் மலேசியா பேங்க் நெகாரா கவர்னர் டான்ஸ்ரீ நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

சிங்கப்பூர் மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது, மொத்த வர்த்தக மதிப்பு 2021 இல் RM267.11 பில்லியன் ஆகும், இது 2020 இல் பதிவு செய்யப்பட்ட மதிப்புடன் ஒப்பிடும்போது 25.2% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here