ஷா ஆலாம், செப்டம்பர் 5 :
இன்று, இங்குள்ள பிரிவு 7ல் உள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பின், 16வது மாடியில் உள்ள ஸ்டுடியோ வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு பேர் கொண்ட குடும்பம் ஒன்று அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 1.46 மணிக்கு அவரது துறைக்கு அழைப்பு வந்தது, அதனைத் தொடர்ந்து ஷா ஆலாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது.
“சம்பவம் நடந்த இடத்திற்கு அதிகாலை 1.53 மணியளவில் வந்த மீட்புக் குழுவினர், சம்பவம் உண்மையாகவே நிகழ்ந்தது என்பதையும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சிக்கியிருப்பதையும் கண்டறிந்தனர்.
தீயை அணைக்கும் நடவடிக்கையின் போது, 37 வயது முதல் ஒன்பது மாதங்களுக்கு இடைப்பட்ட வயதுடைய அனைத்து பாதிக்கப்பட்டவர்களையும் குழுவினர் உடனடியாக வீட்டிலிருந்து அகற்றினர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தீயணைப்புக் குழாய்களைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தும் போது, பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.