கோலாலம்பூர், செப்டம்பர் 7 :
“முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சிறை அறையில் இல்லை, மாறாக “சிறை வளாகத்திற்குள் ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டும் செய்தியின் ஸ்கிரீன்ஷாட் செய்தி ஒன்று, தற்போது வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இது ஒரு போலி செய்தி என்று சிறைத்துறை கடுமையாக சாடியுள்ளது.
வைரலான இரண்டு பகுதி செய்தியில், இந்த வீடுகள் “மூத்த சிறை அதிகாரிகளுக்கு சொந்தமானவை என்றும்”, “காஜாங்கில் மூத்த சிறை அதிகாரியாக இருக்கும் அவரது உறவினர் ஒருவரின் நல்ல நண்பர் மூலம் இந்த தகவல் பெறப்பட்டது” என்றும் அச்செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 7) அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டது.
அதில் “இது ஒரு தவறான தகவல். இதைப் பரப்புவதை உடனே நிறுத்துங்கள்” என்று எச்சரித்தது.
SRC இன்டர்நேஷனல் நிதியில் RM42 மில்லியன் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 23 அன்று கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, நஜிப் தற்போது காஜாங் சிறையில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.