மாச்சாங் மருத்துவமனையில் நீர் விநியோகத்தடைக்கு காரணம், நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததே – கிளாந்தான் மாநில சுகாதாரத் துறை

கோத்தா பாரு, செப்டம்பர் 7 :

மாச்சாங்கின் சுங்கை பாகனில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் (LRA) சேதமடைந்ததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் (செப்டம்பர் 5 & 6) ஆகிய நாட்களில் மாச்சாங் மருத்துவமனையில் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.

கிளாந்தான் மாநில சுகாதாரத் துறையின் (JKNK) இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறுகையில் , சுங்கை பாகனில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட சேதத்தால் மருத்துவமனைக்கு, குறிப்பாக பிரதான தொட்டியின் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டது என்றார்.

இந்த நீர் வழங்கலில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆயிர் கிளாந்தான் Sdn Bhd (AKSB) நிறுவனம் மாச்சாங் மருத்துவமனையின் பிரதான நீர் சேமிப்பு தொட்டிக்கு விரைவாக நீர் விநியோகத்தை அனுப்பியது என்று இது தொடர்பாக புதன்கிழமை (செப். 7) அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

மேலும் “செப். 6-ஆம் தேதி மாலை முதல் படிப்படியாக நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனையின் சேவைகள் மற்றும் நோயாளி நிர்வாகம் இந்த இடையூறுகளால் பாதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் ஜைனி கூறினார்.

“எனினும் இந்த இடையூறினால் நோயாளர்கள் எதிர்கொண்ட சிரமத்திற்கு கிளாந்தான் மாநில சுகாதாரத் துறை வருத்தம் தெரிவிக்கிறது மற்றும் மாச்சாங் மருத்துவமனை, Radicare மற்றும் ஆயிர் கிளாந்தான் நிறுவனம் என்பன இடையூறுகளை சமாளிக்க எடுத்த விரைவான நடவடிக்கைக்கு நன்றி,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here