15வது பொதுத்தேர்தல்: சரவணன் தொடர்ந்தும் தாப்பாவிலேயே போட்டியிட விருப்பம்

ஈப்போ, செப்டம்பர் 11 :

தற்போதைய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் 15வது பொதுத் தேர்தலில் (GE5) தொடர்ந்தும் போட்டியிட்டு, தனது தொகுதியை தக்கவைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் .

மஇகா துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான அவர், தாப்பாவிலுள்ள வாக்காளர்கள் தங்கள் எம்பியாக அவர் செய்த சேவைகளையும் உதவிகளையும் அறிந்திருப்பதே இதற்குக் காரணம் என்று கூறினார்.

“நான் வேறொரு இடத்திற்குச் சென்றால், எனது சேவைகளைப் பற்றி மக்களுக்குத் தெரியாது, கோவிட்-19 இன் போது நான் என்ன செய்தேன், யார் உதவி செய்தார்கள் என்பது தாப்பா மக்களுக்குத் தெரியும்.

“தாப்பா மக்கள் என்னை விரும்பும் வரை, நான் தாப்பாவிலேயே போட்டியிட்டு, சேவையாற்ற விரும்புகிறேன், இருப்பினும் அது கட்சியின் தலைவரின் ஒப்புதலுக்கு உட்பட்டது” என்று, அவர் இன்று பேராக் இந்து வழிபாட்டு மன்றங்களின் மாநாட்டை நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக, ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட்கூறுகையில், மஇகா GE15 இல் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பினால், ‘பண்டமாற்று முறையில்’ பூலாயையும் தாப்பாவையும் மாற்றிக்கொள்ளலாம் மஇகாவிடம் கேட்டுக் கொண்டார்.

ஆனால் தொகுதி பங்கீடு குறித்த முடிவை பாரிசான் நேசனல் (BN) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் தனிச்சிறப்பு என்றும், இது தொடர்பான விஷயங்களை கட்சித் தலைமையிடம் விட்டுவிடுவதாகவும் சரவணன் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here