பாகன் செராய், செப்டம்பர் 19 :
இங்குள்ள ஜாலான் பந்தாய் தஞ்சோங் பியாண்டாங்கில், நேற்று போலீசார் மேற்கொண்ட தெருக் குண்டர்கள் சோதனையில் ஆபத்தான சாகசம் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒட்டியதாக கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் இரண்டு படிவம் 5 மாணவர்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட 17 மற்றும் 18 வயதுடைய மூன்று இளைஞர்களைத் தவிர, கெரியான் மாவட்ட போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுப் பிரிவின் (பிஎஸ்பிடிடி) செயல்பாட்டுக் குழு நான்கு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்ததாக கெரியான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் மசுகி மாட் கூறினார்.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 70 மோட்டார் சைக்கிள்களும் சோதனை செய்யப்பட்டதாகவும், அதில் பல்வேறு குற்றங்களுக்காக 24 சம்மன்கள் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவர் கூறியபடி, அந்த இடத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில், குறிப்பாக வார இறுதி நாட்களில் பல்வேறு ஆபத்தான சாகசங்களைச் செய்த மற்றும் வேகமாக வாகனமோட்டும் சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தொடர்பில் பொதுமக்கள் புகாரளித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
“ஆபரேஷன் நடத்தப்பட்டபோது, பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ‘சூப்பர்மேன்’ மற்றும் ‘வீலி’ போன்ற ஆபத்தான சாகசங்களை செய்து கொண்டிருந்தனர்.
“ஜாலான் பந்தாய் தஞ்சோங் பியாண்டாங்கிலிருந்து கோலா குராவ் நோக்கி ஒரு கிலோமீட்டர் வரை பல்வேறு வடிவங்களில் தங்கள் இயந்திரங்களின் வேகத்தை சரிபார்க்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருந்தனர், இதுபோன்ற செயல்கள் மற்ற பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 42(1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.