வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட மலேசியர்களை அரசு பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வரும்- பிரதமர் உறுதி

கோலாலம்பூர், செப்டம்பர் 20 :

பல நாடுகளில் வேலை வாய்ப்பு மோசடி கும்பல்களினால் ஏமாற்றப்பட்டு, அவர்களிடம் சிக்கிக்கொண்டுள்ள பலியாகியுள்ள மலேசியர்களை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும், அதற்கான முயற்சிகள் தற்போதுள்ள பல வழிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

லாவோஸ், மியன்மார், தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள், அதாவது வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மலேசியர்களின் அவலநிலையை அரசாங்கம் ஆழ்ந்த அக்கறையுடன் கவனித்து வருவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

மலேசிய சமூகக் குற்றப் பாதுகாப்பு (MCCC) மற்றும் மலேசிய அனைத்துலக மனிதாபிமான அமைப்பு (MHO) குரல் கொடுத்தபடி, வேலை மோசடி கும்பல் காரணமாக, வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களின் பிரச்சினைக்கு உதவுவதற்கும் அவற்றைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

“பிரதமர் துறை (சிறப்புப் பணிகள்) அமைச்சர் டத்தோ டாக்டர் அப்துல் லத்தீஃப் அஹ்மட் ஏற்கனவே MCCC தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹாசன் மற்றும் MHO பொதுச்செயலாளர் டத்தோ ஹிஷாமுதீன் ஹாஷிம் மற்றும் வேலை மோசடி கும்பலினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.

மேலும் இது தொடர்பான விரிவான தகவல்களைப் பெறும் பொருட்டு, நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, கம்போடியாவில் வேலை மோசடி கும்பல்களால் பாதிக்கப்பட்ட 158 வழக்குகளில் 143 பேர் மீட்கப்பட்டதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.

இதற்கிடையில், இஸ்மாயில் சப்ரி அனைத்து மலேசிய குடும்பங்களும் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here