மலாக்காவில் சட்டவிரோத சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 10 வளாகங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

மலாக்கா, செப்டம்பர் 23 :

நேற்றுக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, மலாக்கா தெங்காவில் சட்டவிரோத சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் 10 வளாகங்களுக்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் (TNB) உதவியுடன் காவல்துறையினரால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

வளாகம் காலியாக இருந்ததால் நடவடிக்கையின் போது யாரும் கைது செய்யப்படவில்லை என்று மலாக்கா தெங்கா காவல்துறையின் தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

“செல்போன் கடைகள், உணவகங்கள் மற்றும் தொலைபேசி சேவை வழங்குநர்கள் போன்ற சட்டப்பூர்வ வணிகங்களின் போர்வையில் இந்த வளாகங்கள் இயங்குகிறன. அதிகாரிகள் வருகையை கண்டறிய சில வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

“சில வளாகங்களின் முன் நுழைவாயில் மூடப்பட்டிருந்தது, ஆனால் வாடிக்கையாளர்களை உள்ளே வந்து சூதாட அனுமதிக்க பின் நுழைவாயில்கள் இருந்தன,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சோதனையிடப்பட்ட அனைத்து வளாகங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்று
கிறிஸ்டோபர் கூறினார்.

இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை களையும் நோக்கில் 440 சோதனைகளை மேற்கொண்டதாகவும் அதில் 61 வளாகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்.

“ஏதேனும் ஒரு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் இருந்தால் பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும், வளாகத்தின் உரிமையாளர்கள் தங்கள் குத்தகைதாரர்களால் மேற்கொள்ளப்படும் வணிக வகைகள் பற்றி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் “சட்டவிரோத சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு அவர்களின் வளாகத்தை குத்தகைதாரர் பயன்படுத்தினால் உரிமையாளர்களும் சட்டச் சிக்கல்களை சந்திக்க நேரிடும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here