மாந்திரீகங்களைப் பயன்படுத்தி வாகன திருட்டில் ஈடுபடும் கும்பல்- போலீசார் வியப்பு

மலாக்கா, செப்டம்பர் 23:

செப்டம்பர் 14 அன்று சேனாய், ஜோகூர் பாருவைச் சுற்றி தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு, பதாம் கும்பல் (Batam Gang) என நம்பப்படும் நான்கு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாகனத் திருட்டு கும்பலை போலீசார் முறியடித்தனர்.

22 முதல் 41 வயதுடைய சந்தேக நபர்கள் தென் மாநிலத்திலுள்ள வெவ்வேறு இடங்களில் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

ஜோகூரில் கார்களை வாடகைக்கு எடுத்து மலாக்காவுக்குச் செல்வதும், அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தாயத்துக்கள் மற்றும் மந்திரங்களைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்வது இந்தக் கும்பலின் செயல்பாடாகும் என்று அவர் கூறினார்.

“சோதனைகளின் போது, சந்தேக நபர்கள் தங்கள் குற்றத்தை மறைக்க தாயத்துகளாக அல்லது பாதுகாப்பிற்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வசனங்கள் மற்றும் மந்திரங்கள் கொண்ட பொருட்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இக்கும்பல் இந்த மாத தொடக்கத்தில் இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“கொள்ளையின் போது பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பல மொபைல் போன்கள், டார்ச்லைட் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட வாகனங்களை குறிவைத்து, பின்னர் பிளக்குகளில் இருந்து எடுக்கப்படும் பீங்கான் துண்டுகளைப் பயன்படுத்தி கார் கண்ணாடிகளை உடைத்து திருடுவது இந்தக் கும்பலின் செயல்பாடாகும் என்று கிறிஸ்டோபர் கூறினார்.

“பதாம் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், மலாக்கா தெங்கா மாவட்டத்தில் எட்டு வழக்குகளை போலீசார் தீர்த்து வைத்துள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் 379வது பிரிவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் வாகனங்களுக்குள் விலையுயர்ந்த பொருட்களை விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here