ஜோகூர் பாரு, செப்டம்பர் 27 :
நேற்று, ஜாலான் அப்துல்லா இப்ராஹிமில் உள்ள ஒரு கட்டடத்தில் மின்சார கேபிள்களை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர், ரவூப் செலாமாட் கூறுகையில், 58 வயதான ஒரு உள்ளூர்காரரிடமிருந்து நேற்று நண்பகல் 12.22 மணிக்கு, குறித்த சம்பவம் தொடர்பான புகாரை தமது துறை பெற்றதாகத் தெரிவித்தார்.
அதாவது, இரண்டு பேர் மின்சார கேபிளை உடைத்து திருடியதாக கட்டிடத்தின் பராமரிப்பாளரான அவர் கூறினார்.
தகவலின் பேரில், மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவு (URB) மற்றும் IPD JBS இன் ரோந்து கார் (MPV) பிரிவு உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு விரைந்து, 30 வயதுடைய இருவரை கைது செய்தனர்.
“மேலும் அவர்களிடமிருந்து உலோகக் கட்டர்கள், ஹேக்ஸாக்கள், சரிசெய்யக்கூடிய ஸ்பேனர்கள், ஸ்க்ரூடிரைவர்கள், மின்விளக்குகள் மற்றும் கேபிள்கள் அடங்கிய சாக்குப்பை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
“முதற்கட்ட விசாரணையின் முடிவுகளில் சந்தேக நபர்களுக்கு அந்த கேபிள்களை விற்று பணம் பெறும் நோக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.அத்தோடு அவர்கள் திருடிய மின்சார கேபிள்களை குப்பைக் கடைக்கு விற்று பணம் சம்பாதிப்பதாக ” இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் ரவூப் தெரிவித்தார்.
ரவூப்பின் கூற்றுப்படி, அவ்விருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவு, சந்தேகத்திற்குரிய இருவருக்குமே மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
“மேலும் சோதனையின் முடிவுகளில், சந்தேக நபர்களில் ஒருவருக்கு ஏற்கனவே ஒரு போதைப்பொருள் வழக்கு மற்றும் மூன்று குற்றவியல் வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.
“சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் IPD JBS ஹாட்லைன் 07-2182323 அல்லது விசாரணை அதிகாரி சின் சென் சின் வான் @ வான் ஷாஸ்வானி அப்துல்லாவை 012-3805097 என்ற எண்ணில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 488, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379 மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 28 (1) (எல்எல்) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.