
மலேசியாவின் முதல் கருங்கல் ஆலயமும், தென்கிழக்காசிய திருப்பதி என பெருமைக்குரிய கிள்ளான், ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆலயம் வழிப்பாட்டு தளமாக மட்டுமல்லாமல் சமுதாய கூடமாக விளங்க வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக இந்த ஆலயம் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
ஆலயத்தலைவர் சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இந்த ஆலயத்தின் வழி வசதி குறைந்தோர் மற்றும் கல்வி சிறந்த தேர்ச்சி பெற்று மேல்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக கோவிட் தொற்று காலத்தில் பல்வேறு சமுதாய உதவிகளை இந்த ஆலயம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்பொழுது காப்பாரில் இயங்கி வரும் ரீத்தா ஆதரவற்றோர் இல்லத்திற்கு 25,000 ரிங்கிட் நன்கொடை வழங்கி இருக்கிறது. இந்த நன்கொடை குறித்து ரீத்தா ஆதரவற்றோர் இல்லத்தி ஆலோசகர் மகேஸ்வரன் பெரியசாமி ஆலயம் வழங்கிய இந்த நன்கொடை கட்டட சீரமைப்பு பணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
ஆலயத்தலைவர் கூறுகையில் ரீத்தா ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு இருப்பிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும் நோக்கில் புதிய கட்டடம் எழுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணியில் ஆலயத்தின் பங்கு இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையே ஆலயத்தில் புரட்டாசி மாத விழா நடைபெற்று வருவதாகவும் நாளை புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோபூஜையுடன் கூடிய திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.8) காலை 9.30 மணியளவில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு எம்பெருமானின் அருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.