கோத்தா கினாபாலு, அக்டோபர் 25 :
இன்று செவ்வாய்க்கிழமை (அக் 25) துவாரான் மாவட்டத்தில், மலைப்பகுதியிலிருந்து 10 டன் எடை கொண்ட லோரி, அவர் அமர்ந்திருந்த லோரி மீது விழுந்ததில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
57 வயதான ஹென்ட்ரி ஜுன்டாப், என்ற ஆடவரே உடல் நசுங்கிய நிலையில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் தனது லோரியில் இருந்தபடி தாமான் ஸ்ரீ காயாங், ஜாலான் சுலாமான் என்ற இடத்தில் ஒரு மலைப்பகுதியில் சில பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, மலையின் மேல் பகுதியில் இருந்து மண் ஏற்றப்பட்ட லோரி மலைச் சரிவில் இருந்து சறுக்கி கீழே விழுந்து, அவர் இருந்த லோரி மீது மோதியது.
மேலிருந்து விழுந்த 10 டன் லோரி ஓட்டுநர் சிறிய காயங்களுடன் தப்பினார் என்று சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர், மிஸ்ரான் பிசாரா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 9.27 மணிக்கு விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்தது என்றும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பலத்த காயம் அடைந்தவரை லோரிக்கு வெளியே மீட்டனர்.
மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன், சம்பவ இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகள் ஹென்ட்ரிக்கு ஆரம்ப சிகிச்சை அளித்தனர்,” என்று அவர் கூறினார்.
காலை 11.40 மணியளவில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன, இந்த வழக்கில் வேறு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.