மக்களின் வாழ்வாதாரத்தின் மீது அரசாங்கம் என்றும் அக்கறை கொள்கிறது ; வேலை வாய்ப்பு பெருவிழாவில் தெங்கு ஸஃப்ருல் பேச்சு

எஸ். வெங்கடேஷ், படம்: தி. மோகன்
கோலசிலாங்கூர், நவ. 4-

மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய தேசிய முன்னணி அரசாங்கம் என்றும் முனைப்புக் காட்டுகின்றது. அவ்வகையில் கோலசிலாங்கூரில் நடத்தப்படும் KARNIVAL KERJAYA JAMINKERJA MALAYSIA 2022 எனும் வேலை வாய்ப்புப் பெருவிழாவில் 26 முதலாளிகளை உட்படுத்தி 5,643 வேலைகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுவதாக பராமரிப்பு நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

நேற்று கோலசிலாங்கூரில் இந்த வேலை வாய்ப்புப் பெருவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய தெங்கு ஸஃப்ருல், நாட்டில் ஏற்பட்ட கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை விகிதம் 4.5 விழுக்காடாகப் பதிவானது. அதற்கு மறு ஆண்டு அந்த எண்ணிக்கை விகிதம் 4.6 விழுக்காடாக உயர்ந்தது.

இந்நிலையில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க அரசாங்கம் பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன் பலனாக இவ்வாண்டு ஆகஸ்டு மாதத் தரவின்படி நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் கட்டங்கட்டமாக 3.7 விழுக்காடு வரை குறைக்கப்பட்டது.

அதே சமயம் பொருளாதார துறைகளும் மீண்டும் பாதுகாப்பாகவும் சீராகவும் திறக்கப்பட அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளும் இதற்குப் பெரும் பங்காற்றியது.

இந்த வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய அரசாங்கத்தின் மற்றொரு நடவடிக்கையானது பிஎஸ்யு எனப்படும் ஊதிய உதவித் தொகைத் திட்டமாகும்.

2020 ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரையில் 21 பில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பலனாக நாடு தழுவிய 2.96 மில்லியன் பேரின் வேலை காப்பாற்றித் தரப்பட்டுள்ளது.

இதன்மூலம் 358,158 முதலாளிகள் பலன் அடைந்துள்ளனர். தொடர்ந்து மக்களின் சுபிட்ங்ம் குறிப்பாக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசாங்கம் –MY FutureJobs தளத்தின் வாயிலாக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கும் அரசாங்கம் முழு ஆதரவு வழங்கியுள்ளது.

இந்தத் தளமானது சொக்சோ அமைப்பின் வாயிலாக மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாண்டு அக்டோபர் 14ஆம் தேதி வரையில் இந்தத் தளத்தின் மூலம் நாடு தழுவிய அளவில் 652,799 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கையில் 454,510 பேர் பெஞ்சானா கெர்ஜாயா சம்பளத் திட்டம், ஜாமீன் கெர்ஜா திட்டம் ஆகியவற்றின் மூலம் உதவிகளைப் பெற்றவர்களாவர்.

இது தவிர இந்த வேலை வாய்ப்புப் பெருவிழாவை அரசாங்கம் நாடு தழுவிய அளவில் நடத்தி வேலை தேடுபவர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு ஆதரவு நல்கி வருகிறது என்றார் அவர். தொடர்ந்து மக்களுக்கு குறிப்பாக புறநகர்ப் பகுதியில் வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியில் சொக்சோ அமைப்பு சில அமைச்சுகள், இலாகாக்களுடன் இணைந்து Pusat Satelit MYFutureJobs மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு தழுவிய அளவில் பல இடங்களில் தற்போது 150 Pusat Satelit MYFutureJobs திறக்கப்பட்டுள்ளன. அதில் 12 சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கின்றன. பாயா ஜெராஸ், பூலாவ் மெராந்தி, புக்கிட் காப்பார், சுங்கை குமுட், புக்கிட் செராக்கா, கம்போங் குண்டாங், தாமான் சௌஜானா உத்தாமா, பாங்கி, காஜாங், மலாயாப் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் இந்த மையம் உள்ளது.

தற்போது 2023 வரவு செலவுத் திட்டத்தின்படி நாடு தழுவிய அளவில் உள்ள யுடிசி மையங்களில் மேலும் 13 Pusat Satelit MYFutureJobsதிறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசாங்கம் – புறநகர் / உட்புறப் பகுதி வாழ் மக்களுக்கு இடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதற்கு இந்த மையங்கள் அவசியமாகின்றது.

இது தவிர வேலை தேடும் மக்களுக்கான மையமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் தேசிய வேலை வாய்ப்பு மையத்தை உருவாக்க மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற சொக்சோ அமைப்புக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெங்கு ஸஃப்ருல் கூறினார்.

இது தவிர அரசாங்கம் இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. வேலை தேடுபவர்களுக்கு பல பிரத்தியேக உதவித் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. எனவே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள இளைஞர்கள் முனைய வேண்டும் என தெங்கு ஸஃப்ருல் கேட்டுக் கொண்டார்.

நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சொக்சோ அமைப்பின் தலைவர் டத்தோ சுபாஹான் கமால், சொக்சோவின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here