நேபாள நாட்டு வணிகர் ஒருவர் தனது சக நாட்டுக்காரர்கள் இருவரைக் கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில், இன்று சிரம்பான் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட தாகூர் பிரசாத் பண்டாரி, 37, என்பவருக்கு எதிரான குற்றம் மாவட்ட நிதிமன்ற நீதிபதி முகமட் இப்ராஹிம் முகமட் குலாம் முன்நிலையில் மலாய் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, தனது புரிதலை தலையசைத்தார்.
இருப்பினும், கொலைக்குற்றம் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
தனித்தனியாக வாசிக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் நேபாள நாட்டுக்காரர்களான மனோஜ் குமார் சவுத்ரி, 35 மற்றும் கிருஷ்ண குமார் தமாய் பரியார், 46 ஆகியோரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
டிசம்பர் 3 ஆம் தேதி காலை 9.08 மணி முதல் மாலை 4.48 மணி வரை, ஜாலான் ஹருவான் 4/7, புசாட் கொமர்சியல் ஓக்லாண்ட், செரெம்பனில் உள்ள உணவகத்தில் இந்த குற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கட்டாய மரண தண்டனையை விதிக்க வழி செய்கிறது.
தடயவியல், இரசாயன மற்றும் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக இந்த வழக்கை பிப்ரவரி 13, 2023 அன்று மீண்டும் செவிமடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தொழிலாளர்களால் கேன்டீனாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வளாகத்தில் முகத்தில் காயங்களுடன் இரு நேபாள ஆண்கள் இறந்து கிடந்ததாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.