பழுதடைந்த லோரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்

நேற்றிரவு பிளஸ் நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி 279.6 ஆவது அவசரப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த லோரி மீது மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் அதில் பயணஞ்செய்தவரும் பரிதாபமாக இறந்தனர்.

இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், லோரியின் அடியில் சிக்கிய 18 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் தசாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

“செனாவாங்கில் இருந்து சிலாங்கூர், பூச்சோங் நோக்கி ஒரு நபர் ஓட்டிச் சென்ற லோரியின் வலதுபக்க பின்புற டயர் வெடித்ததில், 60 வயதுடைய லோரி ஓட்டுநர், எச்சரிக்கை முக்கோணத்தை வைத்து அவசர பாதையில் வாகனத்தை நிறுத்தினார்,” என்று அவர் கூறினார்.

அப்போது அதே திசையில் இருந்து 18 வயதுடைய இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, லோரியின் பின்பகுதியில் மோதியதாக அவர் கூறினார்.

“சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here