ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நான்கு சபா நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியாகுமா?

நாட்டில் கட்சி தாவல் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், சபாவின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் எதிர்பாராமல் காலியாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை, பெர்சாத்துவிடமிருந்து டிசம்பர் 27-ஆம் தேதி பெறப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ ஜொஹரி அப்துல் தெரிவித்தார்.

“அதை நான் முதலில் சரிபார்க்க வேண்டியிருக்கிறது. அவர்களின் நிலை குறித்த முடிவு 21 நாட்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் சபாவைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை தொடர்பில் சபாநாயகரே முடிவை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில், சபாவின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பாராத விதமாக தங்கள் தொகுதிகளை காலி செய்துள்ளதாக பெர்சாத்து கட்சி சயாநாயகருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக, பெர்சாத்து துணைத் தலைவரும், சபா மாநில பெர்சத்து தலைவருமான ரொனால்ட் கியாண்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அதன்டிப்படையில் காபுங்ஙான் ரக்யாட் சபா (GRS) கூட்டணி சின்னத்தின் கீழ், பெர்சாத்து கட்சி உறுப்பினர்களாக, கடந்த 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நான்கு உறுப்பினர்களும் எதிர்பாராத விதமாக புதிய கட்சி அமைப்பதற்காக, பெர்சாத்து கட்சியிலிருந்து விலக்கியதாகவும், இதனால் கடைசியில் சட்டதிட்டங்களுக்கு அமைய அவர்களது உறுப்பினர் உரிமம் ரத்தாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 49(ஏ)-வுக்கு ஏற்ப அனுப்பப்பட்டதாகவும், அவ்வறிக்கை கிடைத்த 21 நாட்களுக்குள் சபாநாயகர் தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

மேலும், அர்மிசான் முஹ்மட் அலி (பாப்பார்), கைருல் ஃபிர்டாவுஸ் அக்பர் கான் (பத்து அப்பி), ஜோனதன் யாசின் (ராணாவ்) மற்றும் மட்பாலி மூசா (சிப்பித்தாங்) ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இம்மாதம் 19 ஆம் தேதி நடந்த மக்களவைக் கூட்டத்தின்போது, ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக குறித்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமர்ந்திருந்ததாகவும் ரொனால்ட் கியாண்டி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தொகுதி காலியாகி விட்டது என்ற அறிவிப்புக் கடிதம் சபாநாயகரிடமிருந்து கிடைத்த 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் குறித்த தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டும். எது எவ்வாறாயினும் இதில் சபாநாயகரே முடிவு எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here