கோலாலம்பூர்:
டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடமிருந்து RM1மில்லியன் பணத்தை பெற்றதை, உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டிலிருந்து, ஃபெல்டாவின் முன்னாள் தலைவர், டான் ஶ்ரீ ஷாரிர் அப்துல் சமாட்டை, நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து, விடுதலை செய்தது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாரிர் அப்துல் சமாட்டுக்கு எதிரான வழக்கைத் தொடரும் எண்ணம் தமது தரப்புக்கு இல்லை என்று, அரசு தரப்பு வழக்கறிஞர் ரஷிடா முர்னி அஸ்மி தெரிவித்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, டத்தோ முஹ்மட் ஜமில் உசேன்,அவருக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து இன்று ஷாரிரை விடுவித்து, விடுதலை செய்தார்.
வருமான வரி பாரத்தில் உண்மையான வருமானத்தை அறிவிக்காமல், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, ஷாரிருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அக்குற்றத்தை அவர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி, கோலாலம்பூர், ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிம், அரசாங்க அலுவலக வளாகத்திலுள்ள டூத்தா கிளை உள்நாட்டு வருமான வரி வாரியத்தில் புரிந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.