குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளை சகல அம்சங்களிலிருந்தும் விரிவான முறையில் ஆராய உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அதில் தாமதமான அல்லது நிலுவையிலுள்ள வழக்குகள், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் மற்றும் வெளிநாட்டு ஆண்களை மணந்த உள்ளூர் பெண்கள் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
“நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அம்சங்களில் எந்த சமரசமும் செய்யாமல், குடியுரிமை விண்ணப்ப செயல்முறை விரிவான முறையில் எளிதாக்கப்படும் என்பதை நான் உறுதியளிக்கிறேன்,” என்று அவர் இன்று தேசிய பதிவுத் துறை (NRD) தலைமையகத்திற்கு பணி நிமிர்த்தம் வருகை தந்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியப் பெண்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான செயல்முறையை அரசாங்கம் விரைவில் தொடங்கும் என்று பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸலினா ஓத்மான் சமீபத்தில் கூறியது குறித்து கருத்துரைக்கையில் சைபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
கூட்டரசு அரசியலமைப்பின் இரண்டாம் அட்டவணையின் பகுதி II-ல் திருத்தம் செய்யப்படுவதால், தந்தை மலேசியராக இருந்தால், வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வாறு குடியுரிமை கிடைக்குமோ அது போல தாய் அமலேசியராக இருந்தாலும் மலேசிய குடியுரிமைக்கான உரிமையை அந்த குழந்தைகளுக்கு வழங்க வழி செய்யும்.
நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு குடியுரிமைப் பிரச்சினைகளில் முழுமையாக கவனம் செலுத்தும் என்றும்
குறித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட பணிப்பத்திரம் அடுத்த மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.