பங்சார், லக்கி கார்டன் பல இன குடியிருப்பாளர்கள் கொண்டாடிய பொங்கல்

தமிழர்களின் பாரம்பரியக் கொண்டாட்டமான பொங்கல் திருநாள், அண்மைக் காலமாக இந்தியர்களின் கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாக மாறிவருகிறது. இந்த நாளில் பொது நிகழ்ச்சிகளில் மற்ற அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளும் நடைமுறை உருவாகிவருகிறது.

பல இன மக்களும் இந்தியர்களுக்குத் தீபாவளியைப் போன்று பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது. தலைநகர் பங்சார், லக்கி கார்டன் வட்டாரத்திலுள்ள பல இன மக்களும் இந்தியர்களுடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

அந்த வட்டாரத்தின் பொதுவெளியில் பொங்கல் பானை வைத்து தமிழர் கலாச்சாரத்திற்கேற்ப கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில் மற்ற இன மக்களும் கலந்துகொண்டு பொங்கலைச் சுவைத்து மகிழ்ந்ததோடு சக இந்தியக் குடியிருப்பாளர்களுக்கும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

 மாலை 4 மணியளவில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை லக்கி கார்டன் குடியிருப்பாளர் சங்கமும் லக்கி கார்டன் அண்டைவீட்டார் கண்காணிப்புக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ருக்குன் தெத்தாங்கா சங்கத்தின் தலைவர் கே. அருள்ஜோதி, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்ற சகோதர இனத்தவர்களுக்கு தோரணம் கட்டுவது எப்படி என்பது சொல்லித் தரப்பட்டதாகவும் அதனை மற்ற இனத்தவர்களும் ஆர்வத்துடன் செய்து பார்த்தனர் என்றும் தெரிவித்தார்.

5 பொங்கல் பானைகளில் பொங்கலிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்சார் காவல் நிலையத்தையும் பந்தாய் காவல்நிலையத்தையும் சேர்ந்த அதிகாரிகளும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தொடர்பு, இலக்கவியல் அமைச்சருமான ஃபாமி ஃபட்ஸில் சார்பில் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர் இணை பேராசிரியர் கே.திலகவதி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ சுந்தர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியமும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார். அமரர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியம் குடும்பத்தினர் கடந்த காலத்தில் லக்கி கார்டன் பகுதியில் பல ஆண்டுகள் வசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்கி கார்டன் குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் பிரேமா கந்தசாமி இந்தப் பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here