பொறியியலாளரையும் விட்டு வைக்காத மக்காவ் மோசடி ; RM29 இலட்சம் இழப்பு

மக்காவ் மோசடியில் சிக்கிய பொறியியலாளர் ஒருவர் RM29 இலட்சத்தை இழந்துள்ளதாக, பினாங்கு காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி, பாதிக்கப்பட்ட 45 வயதான பெண்ணிற்கு ஒரு கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, குறித்த பெண்ணுக்கு பல நபர்களுக்கு சொந்தமான கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள், ஏடிஎம் கார்டுகள் கொண்ட ஒரு பார்சல் வந்திருப்பதாகக் கூறினார்.

குறித்த ஆவணங்கள் அனைத்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்று அந்த நபர் மேலும் கூறினார்.

“பாதிக்கப்பட்ட பெண் அக்குற்றச்சாட்டை மறுத்தார், ஆனால் பேராக் போலீஸ் படையைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருடன் குறித்த தொலைபேசி அழைப்பு இணைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

தான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பீதியடைந்த குறித்த பெண் பொறியியலாளர், சந்தேக நபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மோசடிக் கும்பல் வழங்கிய பல கணக்குகளுக்கு RM29 இலட்சம் பணத்தை மாற்றியதாக முகமட் ஷுஹைலி கூறினார்.

மோசடிக் கும்பலுக்கு செலுத்துவதற்காக, அந்த பெண் தனது குடும்பத்திடம் இருந்து RM7 இலட்சம் கடன் வாங்கினார் மற்றும் மொத்தம் RM329,000 வங்கிக் கடனாகப் பெற்றார், மேலும் டிசம்பர் 1, 2022 மற்றும் ஜனவரி 6, 2023க்கு இடையில் 129 வாங்கி பரிவர்த்தனைகள் மூலம் பணம் வைப்பிலிடப்பட்டதாக அவர் கூறினார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் நேற்று காவல்துறையில் புகார் அளித்ததாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் முகமட் ஷுஹைலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here