நடந்து முடிந்த நாட்டின் 15வது பொதுத் தேர்தலின் போது, திரெங்கானுவின் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் பாஸ் தலைவர்களால் வாக்காளர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்பட்டதாகவும், அது தொடர்பான காணொளி தம்மிடம் இருப்பதாகவும் கூறி அம்னோ ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு மனு செய்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டான்ஸ்ரீ ஆசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
குறித்த பணப் பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணை ஆவணங்களை ஊழல் தடுப்பு ஆணையம் திறந்துள்ளதாக ஆசாம் பாக்கி கூறினார்.
தேர்தல் குற்றச் சட்டம் 1954 இன் பிரிவு 10 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தொண்டு, தானம் அல்லது நன்கொடை போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அதில் ஊழல் நடந்திருந்தால் அது இன்னும் ஊழலே என்று அவர் மேலும் கூறினார்.
“தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பில் நாம் புகார்களைப் பெற்ற்றுள்ளோம், எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கையும் நாங்கள் விசாரிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.
GE15க்கு முன்னதாக மாநில அரசாங்கத்திடம் இருந்து i-Pension, i-Belia மற்றும் i-Student போன்ற முயற்சிகள் வடிவில் நிதி உதவி செய்ததன் மூலம் பாஸ் அவர்களின் வாக்குகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் இது எந்த தேர்தல் சட்டங்களையும் மீறாத ஒரு தொண்டு செயல் என்று கடந்த சனிக்கிழமையன்று, பாஸ் கட்சி தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.