சபாவில் நாளை சனிக்கிழமை (பிப். 4) முடிவடையும் மாலை முதல் விடியற்காலை வரையிலான கடல் ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு (பிப்ரவரி 19 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் சட்டம் 1967 இன் பிரிவு 31(4) இன் கீழ் 204 வது முறையாக நீட்டிக்கப்பட்ட இந்த கடல் ஊரடங்கு சட்டமானது முதன்முதலாக ஜூலை 16, 2014 அன்று அமல்படுத்தப்பட்டது.
கிழக்கு கடற்கரை மாவட்டங்களான சண்டாக்கான், பெலூரான், கினாபாடாங்கான், லஹாட் டத்து, குனாக், செம்போர்னா மற்றும் தாவாவ் ஆகிய மாவட்டங்களில் இருந்து மூன்று கடல் மைல் தூரம் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளதாக சபா காவல்துறை ஆணையர், டத்தோ இட்ரிஸ் அப்துல்லா தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும், அத்தோடு வெளியாட்கள் யாரும் ஊரடங்கு உத்தரவு மண்டலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, என்றார்.
கடத்தல், தெற்கு பிலிப்பைன்ஸில் இருந்து பயங்கரவாதிகள் அல்லது குற்றவாளிகள் மலேசிய கடற்பகுதிக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவு தேவை என்றும், இது சபாவுக்கு அப்பால் உள்ள தீவுகளுக்கு வருகை தரும் அனைத்துலக ஆராய்ச்சியாளர்கள் அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.