இன்ஸ்டாகிராமில் தன்னை ஜோகூரின் பட்டத்து இளவரசர் போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடியில் ஈடுபட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

தன்னை ஜோகூரின் பட்டத்து இளவரசரர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் (TMJ) என ஆள்மாறாட்டம் செய்து, ‘HRHCROWNPRINCEOFJOHOR’ என்ற போலி இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில், ஜோகூர் ராயல் பேலஸ் ஊடகத்திலிருந்து நேற்று நண்பகல் 2.35 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக, ஜோகூர் துணை போலீஸ் தலைவர், துணை ஆணையர் எம் குமார் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் அந்த நபர், பல நிறுவனங்கள் அல்லது வணிகர்களுக்கு தன்னை ஜோகூர் பட்டத்து இளவரசர் என்று கூறி வணிகத் திட்டங்களுக்கு நிதி கோரி செய்திகளை அனுப்பியதாக DCP குமார் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர் TMJ இன் அசல் சுயவிவர அடையாளத்தைப் பயன்படுத்தி, ஆள்மாறாட்டம் செய்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்கள் TMJ உடன்தான் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை நம்ப வைப்பதற்காக, அவர் TMJ இன் Instagram இன் சுயவிவரப் பக்கத்தையும் கணக்கையும் மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இதுவரை எட்டு நிறுவனங்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டதாக காவல்துறை நம்புகிறது, மேலும் அந்த எட்டு நிறுவனங்களில், சில குறித்த நபர் வழங்கிய வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

“அத்தகைய மோசடிகளுக்கு உள்ளானவர்கள் போலீஸ் விசாரணைகளுக்கு உதவ முன்வந்து, புகாரளிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதுபோன்ற மோசடிகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவோம்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here