நாடு முழுவதும் உள்ள சமூக மேம்பாட்டுத் துறை (கெமாஸ்) மழலையர் பள்ளிகளில் பணிபுரியும் 9,439க்கும் மேற்பட்ட தன்னார்வ உதவியாளர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை, மார்ச் முதல் RM500 லிருந்து RM800 ஆக உயர்த்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட RM30 மில்லியன் கூடுதல் ஒதுக்கீட்டை இந்த கெமாஸ் தன்னார்வலர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளடக்கியதாக, உள்ளக மற்றும் கிராமிய வளர்ச்சி அமைச்சராகவும் இருக்கும் அஹ்மட் ஜாஹிட் தெரிவித்தார்.
“உணவுத் தேவைகளைத் தயாரித்தல், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் வளாகத்தின் தூய்மையைப் பராமரித்தல் ஆகியவற்றின் மூலம் கிராமப்புற சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை செயல்படுத்துவதில் கெமாஸ் உறுப்பினர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
2011 ஆம் ஆண்டு கெமாஸ் தன்னார்வலர்களுக்கான கொடுப்பனவு வழங்கத் தொடங்கிய போது, ஒரு மாதத்திற்கு 400 ரிங்கிட் மட்டுமே வழங்கியதாகவும், 2017 ஆம் ஆண்டில் இந்தத் தொகை 500 ரிங்கிட் ஆக உயர்த்தப்பட்டதாகவும் ஜாஹிட் கூறினார்.