சிலாங்கூர் மாநிலத் தேர்தல் இந்த ஜூலை மாதம் நடைபெற இருக்கும் வேளையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக மசூதிகள் மற்றும் சூராக்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று, சிலாங்கூர் மாநில அரசியல்வாதிகள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (ADUN) மீண்டும் ஒருமுறை சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா நினைவூட்டினார்.
மசூதிகள் மற்றும் சூராக்கள் என்பன பொதுப் பயன்பாட்டுக்குரிய இடங்களாகும், அரசியல் பிரச்சாரங்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டால், அரசியல் வேறுபாடுகள் காரணமாக அவை சர்ச்சைகள் மற்றும் பிளவுகளுக்கு இடமாக மாறக்கூடாது, இதனால் முஸ்லிம்களின் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
எனவே தேர்தலுக்கு முன்னர் மாநிலத்தில் உள்ள மசூதிகள் மற்றும் சூராக்களை கண்காணிக்கவும், அங்கு அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதைத் தடுக்கவும், சிலாங்கூர் இஸ்லாமிய மத கவுன்சில் (MAIS) மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (JAIS) ஆகியவற்றுக்கு சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டார்.
இஸ்லாத்தின் தூய்மை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இத்தகைய கண்காணிப்பு அவசியம் என்று சிலாங்கூர் சுல்தான் மேலும் விளக்கினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டப் பேரவையின் ஆறாவது தவணையின் தொடக்க விழாவுடன் இணைந்து அவர் ஆற்றிய உரையில், சிலாங்கூர் சுல்தான் இவ்வாறு கூறினார்.