நாசிக் கண்டார் உணவகத்தின் ஊழியர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்

கடந்த வாரம் ஒரு நாசிக்கண்டார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டு, அவ்வுணவகத்தின் ஒரு ஊழியரை அடித்து காயப்படுத்துதல், மற்றும் பொது இடத்தில் ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல் போன்ற குற்றச்சாட்டின் பேரில் இரு ஆடவர்கள், இன்று சிப்பாங் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட எம். இளங்கோவன், 51, மற்றும் எம். வெங்கடேஸ்வரன், 51, ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதி அயுனி இசட்டி சுலைமான் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட பின்னர், இருவருமே தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி, விசாரணை கோரினர்.

வேன் ஓட்டுநராக பணிபுரியும் இளங்கோவன் மீது நான்கு குற்றச்சாட்டுகளும், வாடகைக் கார் ஓட்டுநராக இருக்கும் வெங்கடேஸ்வரன் மீது மூன்று குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

முதல் குற்றச்சாட்டில், கடந்த மார்ச் 16 ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் சைபர்ஜெயாவின் குளோமாக்கில் உள்ள ஒரு உணவகத்தில், இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் முகமட் ஜாஹிருல் ஹோக் மற்றும் சரிஷ்குமார் ஜெயக்குமார் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிகத்துடன், ஆபாசமான வார்த்தைகளைப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இரண்டாவது குற்றச்சாட்டில், அதே உணவகத்தில் அதே நேரம், தேதி மற்றும் இடத்தில் ​​வேண்டுமென்றே முகமட் ஜாஹிருல் ஹோக்கு காயம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

மூன்றாவது குற்றச்சாட்டின்படி, அதே உணவகத்தில் அதே நேரம், தேதி மற்றும் இடத்தில் Pelita Samudra Pertama (M) Sdn Bhd நிறுவனத்திற்கு சொந்தமான தட்டுகளை வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

மேலும் அதே நீதிமன்றத்தில், இளங்கோவன் மீது சரிஷ்குமார் ஜெயக்குமாரை இரும்புக் குச்சியால் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதில் நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இளங்கோவனுக்கு ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM11,600 ஜாமீனும், மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வெங்கடேஸ்வரனுக்கு ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM8,600 ஜாமீனும் வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க மே 10ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here