2020 முதல் 200,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பு (SIP) புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த 2020 பிப்ரவரி 28 முதல், 2023 வரை மொத்தம் 209,903 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அவர்களில், 47,168 பேர் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், 31,434 பேர் சில்லறை வியாபாரம் மற்றும் வாகன பழுதுபார்ப்புத் துறையினர்; 20,460 பேர் விடுதி, தங்குமிடம் மற்றும் கேட்டரிங் துறையினர்; 18,731 பேர் தொழில்முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருந்தும், 15,686 பேர் கட்டுமானத் துறைனர் என்று, இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) நடந்த நாடாளுமன்ற அமர்வின்போது, டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் (BN -செம்ப்ராங்) கேட்ட கேள்விக்கு எழுத்து மூலமான பதிலில் இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) Future of Jobs 2020 அறிக்கையின்படி, மலேசியாவில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு வணிகங்கள் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் காரணமாக 2025 ஆம் ஆண்டுக்குள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று சிவகுமார் கூறினார்.
சமீப காலமாக அமேசான், மைக்ரோசொப்ட், மேத்தா என பல நிறுவனங்கள் ஆட்க்குறைப்பு செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.