புக்கிட் அமான் போலீஸ் அதிகாரியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் மோசடிக்காரர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதால், ஆசிரியை ஒருவர் RM187,000 இழந்தார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 36 வயதான ஆசிரியையை சந்தேக நபர் மே 10 அன்று தொடர்பு கொண்டார் என்று, பகாங் காவல்துறைத் தலைவர், டத்தோ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியை மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும் அவருக்கு எதிராக பிடியாணை இருப்பதாகவும் சந்தேக நபர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“பீதியடைந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை, சந்தேக நபரின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர் வைத்திருந்த அனைத்து சேமிப்புகளையும் ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றினார்.
அத்தோடு”அவரை 130,000 ரிங்கிட் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்குமாறும், அதே கணக்கில் அப்பணத்தை மாற்றுமாறும் சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர் சந்தேக நபருக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் வழங்கினார்” என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.










