மித்ரா என்னும் அரசாங்கத்தின் இந்தியர் உருமாற்றத் திட்டப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் டத்தோ ஆர்.ரமணனின் பணிகளும் சந்திப்புகளும் மேலும் பன்மடங்கு அதிகரித்து விட்டதைக் கண்கூடாக நேரில் பார்க்க முடிந்தது. சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக தனது தொகுதியில் மட்டும் சேவையாற்றி வலம் வந்து கொண்டிருந்தவருக்கு இப்போது நாடு தழுவிய அளவில் பணிகள், திட்டமிடல்கள். புத்ரா ஜெயாவிலுள்ள மித்ரா அலுவலகத்தில் அடுத்தடுத்த சந்திப்புக் கூட்டங்கள், நேரில் சந்திக்கக் காத்திருக்கும் பிரமுகர்கள் – ஆகிய பணிகளின் சுமைகளுக்கு நடுவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் ரமணன்.
அந்த நிலையிலும் மித்ராவின் நடப்புச் செயல் திட்டங்கள் – எதிர்கால நடவடிக்கைகள் – குறித்து மக்கள் ஓசையுடனான பிரத்தியேக நேர்காணலுக்காக நம்முடன் உரையாடினார். அவருடன் அமர்ந்து சில கூடுதல் தகவல்களையும், புள்ளி விவரங்களையும் வழங்கினார் மித்ராவின் தலைமை இயக்குநர் கே.ரவீந்திரன். அந்தச் சந்திப்பின் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்திய சமூகத்திற்கான பல பயனானத் தகவல்களை மக்கள் ஓசை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

மித்ராவின் நடப்புத் திட்டங்களும் எதிர்கால வியூகங்களும்
இந்திய சமூகத்திற்கு மித்ரா மூலம் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படவிருக்கின்றன. அண்மையில் அறிவிக்கப்பட்ட 4 திட்டங்கள் இந்திய சமுதாயத்தை உருமாற்றுவதற்கான ஒரு நல்ல தொடக்கம் எனத் தெரிவித்தார் டத்தோ ஆர். ரமணன்.
மித்ராவின் நடப்புத் திட்டங்கள் குறித்து விவரித்தபோது எதிர்காலத் திட்டங்கள் சிலவற்றின் பயன்கள் குறித்தும் கோடிகாட்டினார். அடுத்தக் கட்டத் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் அரசாங்கத்தின் பரிசீலனைகளில் இருப்பதால் அவற்றின் முழுமையான விவரங்களை இப்போது வெளியிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
அரசு சாரா இயக்கங்கள், இந்திய சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு மானியங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் இன்று மே 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த விண்ணப்ப சமர்ப்பிப்புகளுக்கான இறுதிநாளை மே 28 வரை நீட்டித்ததால், கடந்த வெள்ளிக்கிழமை மே 26ஆம் தேதி வரையில் 1,659 விண்ணப்பங்கள் இணையம் மூலமாகப் பெறப்பட்டிருப்பதாகவும் இவற்றின் மதிப்பு 530 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதல் என்று ரமணன் குறிப்பிட்டார். மித்ராவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி 100 மில்லியன் மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இது தவிர மேலும் மூன்று திட்டங்களை மித்ரா தலைவர் பொறுப்பேற்றதும் ரமணன் அறிவித்திருந்தார். பி40 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் உதவித் தொகையை ஒருமுறை வழங்குவது, சிறுநீரகப் பாதிப்புகளுக்காக டயலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு சிகிச்சைக்கும் தலா 200 ரிங்கிட் வழங்குவது, பாலர்பள்ளிகளுக்கு உதவித்தொகை என ரமணன் அறிவித்த மூன்று அம்சத் திட்டங்களை மித்ரா தற்போது செயல்படுத்தி வருகிறது.
தமிழ்ப்பள்ளிகளை உள்ளடக்கிய விரிவான திட்டம்
மேற்குறிப்பிட்ட நான்கு திட்டங்கள் தவிர மேலும் எட்டுத் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் இருப்பதாக ரமணன் கூறினார். மித்ராவின் அடுத்தத் திட்டம் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் உள்ளடக்கிய மிகப் பிரமாண்டமான, விரிவான திட்டமாக இருக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் அவர் வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் முழுமையான விவரங்கள் இறுதி வடிவம் செய்யப்பட்டதும் அது குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரமணன் கூறினார்.
தமிழ்ப் பள்ளிகள் இந்திய சமூகத்தின் தவிர்க்க முடியாத, இணை பிரியாத ஓர் அங்கம் என்பதால் நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளும் பயன்பெறும் வண்ணம் இந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்து வருகிறோம். அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கிய 100 மில்லியன் ரிங்கிட் இந்தியர்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்ற முனைகளிலும் இந்திய சமுதாயத்திற்கு எவ்வாறு உதவுவது என்பது போன்ற கோணங்களிலும் மித்ரா சிந்தித்து செயல்பட்டு வருகிறது.
உயர் வருமான வேலை வாய்ப்புகள்
இந்திய சமூகத்தினர் உயர் வருமானம் பெறக்கூடிய வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் அதற்குரிய சிறப்புப் பயிற்சிகளை ஏற்படுத்தித் தரும் முயற்சிகளில் மித்ரா தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் இந்திய சமூகத்தினர் உயர் வருமானம் பெறக்கூடியவர்களாக உருமாறும் சூழல் உருவாக்கப்படும். நம் சமூகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும் வாய்ப்பும் ஏற்படும்.
இந்திய இளைஞர்கள் பாரம்பரியத் தொழில்களில் மட்டும் ஈடுபடாமல் தொழில்நுட்பம் சார்ந்த நவீனமயமான – நடப்பு காலத்துக்கு ஏற்ற – தொழில் திறன் பயிற்சிகளைப் பெற்று அதன் மூலம் உயர்வருமானம் பெறும் வகையில் இந்த திட்டத்தை வகுத்து வருகிறோம். இதனால் இந்திய இளைஞர்கள் பெரும் பயன் அடைவார்கள் என்றும் நம்புகிறோம்.
விளையாட்டுத் துறையில் இந்தியர்களை ஊக்குவிக்க…
அடுத்ததாக இந்தியர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கவும் மேலும் அதிகமான இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதை உறுதி செய்யவும் தனது தலைமையிலான மித்ராவில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதுவும் இந்திய சமூகத்தின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்று என்றார் ரமணன்.
அண்மையில் கம்போடியாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவின் சார்பில் பல இந்தியர்கள் பங்குபெற்று சாதனைப் புரிந்திருக்கின்றனர். இதுபோன்று மேலும் பலர் விளையாட்டுத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபடவும் ஏற்கெனவே ஈடுபட்டு வருபவர்களுக்கு மேலும் ஊக்கமூட்டும் வகையிலும் திட்டங்களைத் தயாரித்து வருவதாகவும் ரமணன் தெரிவித்தார்.
திறன் வாய்ந்த இந்திய விளையாட்டாளர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, நாம் அறிமுகப்படுத்தும் திட்டம் அவர்களுக்கு நேரடியாகப் பயனளிக்க எவ்வாறு உதவுவது என்பது போன்ற அம்சங்களை தற்போது விரிவாக ஆராய்ந்து வருகிறோம். ஆய்வுகள் முழுமையடைந்ததும் இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.
இந்தியத் தொழில் முனைவர்களுக்கான கடனுதவித் திட்டம்
வணிகத்துறையில் ஈடுபட விரும்பும் தொழில்முனைவோர்களுக்குக் கடன் உதவித் தொகை வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக ரமணன் மேலும் குறிப்பிட்டார். உயர்கல்வியைப் பெற வாய்ப்பில்லாத பல இந்திய இளைஞர்களும் யுவதிகளும் சிறுதொழில்களிலும், வணிக முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களின் தொழில்களை விரிவுபடுத்த நிதி உதவிகள் தேவைப்படுகின்றன. வங்கிகளில் கடன் பெறுவது போன்ற அம்சங்களில் இவர்களின் பின்னணி காரணமாக சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தெக்குன் போன்ற கடனுதவி முறையில் இவர்களுக்கு கடனுதவி வழங்கி அதன் மூலம் நமது இந்திய சமூகத்தினரை அதிகளவில் தொழில் முனைவர்களாக உருமாற்றுவதற்கான திட்டங்களையும் வகுத்து வருகிறோம்.

தமிழ்ப் பள்ளிகளின் பாலர்பள்ளிகளுக்கு முக்கியத்துவம்
அண்மையில் நான் அறிவித்த, தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும் பாலர்பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார் ரமணன், இதுவரையில் 179 பாலர்பள்ளிகளைச் சேர்ந்த 4,600க்கும் மேற்பட்ட பி40 மாணவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த உதவித் தொகைக்காக இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத பாலர் பள்ளிகள் உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தப் பாலர்பள்ளித் திட்டத்தில் இந்தியப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இந்திய சமூகம் சார்ந்த பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் இந்தப் பாலர்பள்ளிகளை நடத்துபவர்களும் ஆசிரியர்களாக இருப்பவர்களும் பெரும்பாலும் தனித்து வாழும் பெற்றோர்களாக இருப்பதால் அவர்களுக்கான உதவியாகவும் இது அமைகிறது.
தமிழ்ப்பள்ளிகளில் அமைந்திருக்கும் பாலர்பள்ளிகளால் தமிழ்ப்பள்ளிகளில் முதல் வகுப்பில் நுழையும் மாணவர்கள் கணிசமாக உயர்வது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை என எழுந்திருக்கும் அண்மைக் காலப் பிரச்சினைக்கு ஒரு நல்லத் தீர்வாக இந்த பாலர்பள்ளிகளின் வளர்ச்சி அமையும். அதனால்தான் இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்.
தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உதவித்தொகை பரிசீலிப்பு
பல்கலைக்கழகத்தில் பயிலும் பி40 பிரிவு மாணவர்களுக்கு 2,000 ரிங்கிட் வழங்கும் திட்டமானது தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.
பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் பிடிபிடிஎன் போன்ற அரசாங்கக் கடன்களைப் பெற்றும் பெற்றோர்கள் வாங்கியிருக்கும் கடன்களைக் கொண்டும் தங்கள் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கின்றோம். எனவே இந்த உதவித் தொகை தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் பி-40 மாணவர்களுக்கும் வழங்கப்பட நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
டயலிசிஸ் விண்ணப்பங்களை சிகிச்சை மையங்கள் மூலம் சமர்ப்பியுங்கள்
சிறுநீரகப் பாதிப்பால் டயலிசிஸ் எனும் சிகிச்சை முறை தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டமும் நம் சமூகத்தில் இருந்து பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரையில் 459 தனிநபர்கள் நேரடியாக மித்ராவுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பித்திருக்கிறார்கள். மேலும் 481 பேர் டயலிசிஸ் சிகிச்சை வழங்கும் 81 மையங்களின் மூலம் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருக்கின்றனர்.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் ஆலோசனை ஒன்றைக் கூறவிருக்கிறோம். முடிந்தவரையில் டயலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள் தாங்கள் சிகிச்சை பெறும் மையங்களின் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் அவற்றைப் பரிசீலிக்க எங்களுக்கு சுலபமாக இருக்கும். நோயாளிகளின் உடல் நிலை, டயலிசிஸ் சிகிச்சை வழங்கப்படும் தன்மை போன்ற விவரங்களை நாங்கள் பரிசீலனை செய்ய எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.

மித்ரா பணியாளர்களும் கட்டமைப்பும் விரிவுபடுத்தப்பட வேண்டும்
நாங்கள் இதுவரையில் அறிவித்திருக்கும் திட்டம், இனி செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்த மித்ராவின் தற்போதைய பணியாளர் எண்ணிக்கையும் கட்டமைப்பும் போதாது. எனவே மேலே குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்த மித்ராவுக்கு கூடுதலான பணியாளர்களும் விரிவான கட்டமைப்பும் தேவைப்படுகின்றன. அதற்கான ஆய்வுகளிலும் வியூகங்களிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களின் முதல் நோக்கம் அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு வழங்கி இருக்கும் 100 மில்லியன் ரிங்கிட் மானியம் எல்லா வகையிலும் பயனுள்ள வகையில் இந்திய சமூகத்திற்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் சென்று சேர வேண்டும் என்பதுதான். தற்போது அதில் நாங்கள் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய சமூகத்திற்கு மற்ற வகைகளில் எப்படி உதவுவது – எவ்வாறு அவர்களை உருமாற்றுவது – முன்னேற்றுவது – என்பது போன்ற அம்சங்களில் தனது தலைமையின் கீழ் மித்ரா தொடர்ந்து பாடுபடும் என்றும் ரமணன் உறுதியளித்தார்.









