இன்று காலை கிள்ளான் வடதுறைமுகப்பகுதியின் கொள்கலன் வைத்திருக்கும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏரோசல் வகை பொருட்கள் போன்ற எரியக்கூடிய பொருட்களை சேமித்து வைத்திருந்த 13 கொள்கலன்கள் எரிந்து நாசமாயின.
காலை 10.14 மணிக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பைப் பெற்றதும், தீயணைப்புத் துறையினர் விரைந்து செயற்பட்டு, 13 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர், வான் முஹமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
“10 x 40 சதுர அடி மற்றும் 20 x 10 சதுர அடி அளவுள்ள 333 கொள்கலன்களில் 13 அலகுகள் தீப்பிடித்ததாகவும், அவற்றை அணைக்கும் பணியில் ஒன்பது தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் சம்பந்தப்பட்ட 14 என்ஜின்களுடன் மொத்தம் 50 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர்” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் காலை 11.40 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், பிற்பகல் 2.20 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் இன்னும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
எனினும் இந்த சம்பவத்தில் எந்தவிதமான காயங்களோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றும் தீயினால் துறைமுகத்தின் செயல்பாடு பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.