கோலாலம்பூர், பண்டார் பாரு பாங்கியில் உள்ள ஜாலான் பி10/18, தாமான் இண்டஸ்ட்ரி செலாமன் என்ற இடத்தில் உள்ள ஒரு அச்சக தொழிற்சாலையில், இன்று ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் புகை மூட்டத்தால் உயிரிழந்தனர்.
குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது, அவர்கள் லிட்டன், 34 மற்றும் முரேட், 38 என அடையாளம் காணப்பட்டனர் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர், வான் எம்.டி ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
அதிகாலை 4.14 மணிக்கு தீ விபத்து குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே பண்டார் பாரு பாங்கி, காஜாங், செமினி மற்றும் செர்டாங் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து 36 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கட்டிடத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் ஏற்பட்ட தீ, வேகமாக பரவியதாகவும், அதிகாலை 4.50 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது என்றும், ஏனைய நான்கு தொழிலாளர்கள் குறித்த அச்சகத்தை விட்டு வெளியே ஓடித் தப்பித்ததாகவும் அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.