இரண்டு நாட்களுக்கு முன்பு மின்னல் தாக்கியதாக நம்பப்படும் ஒரு பூர்வக் குடியை சேர்ந்த ஆடவர், அடிக்கடி மயக்கம்போட்டு விழுந்ததைத் தொடர்ந்து, தொடர் சிகிச்சைக்காக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் விமானப் பிரிவு, குவா மூசாங் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தது.
மஸ்லான் ரோஸ்லான் (18) என்ற பாதிக்கப்பட்டவர் , இயர்போன்களைப் பயன்படுத்தும்போது மின்னல் தாக்கியதாக நம்பப்படுகிறது என்று, சிலாங்கூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சுபாங் மத்திய மண்டலத் தளத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி, முகமட் ஹஸ்ரிசல் கமருஸ்ஸாமான்கூறினார்.
நோயாளியும் அவர்களது துணையும் கம்போங் பிஞ்சோங், போஸ்ட் கோப் இலிருந்துகுவா மூசாங் மருத்துவமனைக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் 139 (AW139) விமானத்தைப் பயன்படுத்திக் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
“விமானம் மாலை 4 மணிக்கு விமான தளத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.38 மணிக்கு கம்போங் பிஞ்சோங்கை வந்தடைந்தது. நோயாளி சுயநினைவுடன் இருக்கிறார் என்றும், மாலை 5.55 மணியளவில் குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு வந்தவுடன், நோயாளி சுகாதார அமைச்சகத்தின் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு,குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்” என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையில் பைலட் ஃபரிதுல்லாஹமின் முகமட் நோ தலைமையிலான விமானப் பிரிவைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டதாக முகமட் ஹஸ்ரிசல் கூறினார்.