தொலைபேசி மோசடி: ஜோகூர் முதியவர் RM540,000 ஐ இழந்தார்

ஜோகூர் :

தொலைபேசி மோசடி கும்பல் மூலம் முதியவர் ஒருவர் சுமார் RM540,047.97 ஐ இழந்துள்ளார்.

ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற 75 வயதான ஒருவரிடமிருந்து மோசடி தொடர்பில் ஒரு அறிக்கை கிடைத்தது என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் WhatsApp அப்ளிகேஷன் மூலம் ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றதாகவும், அதில் அழைப்பாளர் பாதிக்கப்பட்ட நபரை (keyboard இல்) 9 என்ற எண்ணை அழுத்துமாறு கூறியதாகவும், அவ்வாறு செய்த பிறகு, அந்த அழைப்பு ஒரு நபருடன் இணைக்கப்பட்டதாகவும் குறித்த முதியவர் கூறினார்.

அந்த அழைப்பில் போலீஸ் அதிகாரி என நம்பப்படும் ஒருவர் பேசினார். “பாதிக்கப்பட்டவரின் பெயரில் ஒரு குற்றப் பதிவு இருப்பதாக அந்த அதிகாரி’ பாதிக்கப்பட்டவருக்குத் தெரிவித்தார்.

பின்னர் அந்த அழைப்பு மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது, அவர் தன்னை மூத்த போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார், அவர் குறித்த முதியவர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார் என்று கூறினார், ”என்று கமாருல் ஜமான் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் ஆன்லைனில் ஒரு அறிக்கையை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார், பின்னர் கொடுக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றும்படியும் அவருக்கு கூறப்பட்டது.

பயத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டவர் அதிகாரியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவரது கணக்கில் இருந்து RM543,000.00 பணத்தை எடுத்து அவருக்குச் சொந்தமான மற்றொரு கணக்கில் டெபாசிட் செய்தார்.

அவரைப் பொறுத்தவரை, கடந்த மாத தொடக்கத்தில் அவரது வங்கிக் கணக்கினை சோதனை செய்தபோது, புகார்தாரர் அங்கீகரிக்காத பலருக்கு அவரது சொந்தக் கணக்கில் இருந்து மொத்தம் RM540,047.97 பணம் மாற்றப்பட்டதைக் கண்டறிந்தபோது பாதிக்கப்பட்டவர் மோசடியில் சிக்கிக்கொண்டதாக சந்தேகம் கொண்டார்.

பின்னர் குறித்த கும்பலால் தான் ஏமாற்றப்பட்டதாக போலீசில் முதியவர் புகார் செய்தார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 420ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

மேலும் “வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் சமூகத் தளங்களான Facebook, Instagram மற்றும் Tik Tok போன்றவற்றைப் பின்தொடர்வதுடன், வணிகச் செயல்பாடுகள் தொடர்பான சமீபத்திய தகவல்களைப் பெறுவதுடன், குறிப்பாக நிதி பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் பொதுமக்களை காவல்துறை அறிவுறுத்துகிறது.

“இது தவிர, பணம் செலுத்துவதற்கு முன், காவல்துறையின் Semak MULE ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தவும், அத்தோடு மோசடிக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்க, Whoscall அப்ளிகேஷனைப் பதிவிறக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

நீங்கள் மோசடிக்கு ஆளாகியிருந்தால், கூடிய விரைவில் 997 என்ற எண்ணில் தேசிய மோசடி பதில் மையத்தை (NSRC) தொடர்பு கொள்ளவும்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here