ஈப்போ:
தாமான் ராசி ஜெயாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி தங்க முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி சுமார் RM6.2 மில்லியனை இழந்துள்ளார்.
61 வயதான பாதிக்கப்பட்ட பெண், தங்க முதலீட்டுத் திட்டத்தில் இருந்து பணத்தை பெற முடியாது போனபிறகு தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் என்று பேராக் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.
குறித்த மோசடி தொடர்பில் அந்த பெண் நேற்று (ஜனவரி 22) புகார் அளித்ததாக சொன்னார்.
பாதிக்கப்பட்டவர் அக்டோபர் 14 அன்று பேஸ்புக்கில் குறித்த தங்க முதலீட்டுத் திட்டத்தைப் பற்றிய ஒரு இடுகையைப் பார்த்தார் என்றும், அதற்குள் நுழைய அதில் தரப்பட்டிருந்த இணைப்பைக் கிளிக் செய்தார், அது தெரியாத ஒரு நபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அழைத்துச் சென்றது, பின்னர் அப்பெண் குறித்த முதலீட்டு திட்டத்திற்காக (குழுவில்) அப்பெண்ணைச் சேர்த்தார்.
“பாதிக்கப்பட்டவர் 32 பரிவர்த்தனைகள் மூலம் 11 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் சுமார் RM6.2 மில்லியனை பரிமாற்றம் செய்தார்,” என்று அவர் இன்று (ஜனவரி 23) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்நிலையில் நேற்று (ஜனவரி 22), பாதிக்கப்பட்ட பெண் RM2.2 மில்லியனை திரும்பப் பெற விரும்பியபோது, சந்தேக நபரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
“மேலும் அப்பெண்ணால் முதலீட்டு தளத்தை அணுக முடியவில்லை, அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அப்பெண் உணர்ந்தார்,” என்றும், மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.