ஜோகூர் பாலத்தில் மோட்டார் சைக்கிள் தடங்கள் மே 19 முதல் ஜூன் 5 வரை அவ்வப்போது மூடப்படும்

ஜோகூர் பாரு:

மலேசியா- சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டப் பணிகளுக்காக, ஜோகூர் பாலத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் தடங்கள் அவ்வப்போது மூடப்படும் என்று ‘எம்ஆர்டி கார்ப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 19, 20 ஆகிய தேதிகளிலும் பின்னர், மே 24 முதல் ஜூன் 5ஆம் தேதி வரையிலும் மோட்டார் சைக்கிள் தடங்கள் மூடப்படும். இருப்பினும் வார இறுதி நாட்களில் அவை வழக்கம்போல் செயல்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நோக்கி வரும் தடத்தில் உட்லண்ட்சில் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மலேசியா நோக்கிச் செல்லும் தடத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ‘எம்ஆர்டி கார்ப்’ நிறுவனம், மே 17ஆம் தேதி வெளியிட்டுள்ள ஓர் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

ஆர்டிஎஸ் திட்டத்தின்கீழ், பாலத்தில் தாங்கிகளைப் பொருத்துவதற்காக, ஜோகூர் பாருவில் அமைந்திருக்கும் மலேசியா நோக்கிச் செல்லும் தடம் ஏறக்குறைய 200 மீட்டர் நீளத்திற்கு மூடப்படும். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகள் வலப்பக்கமாகத் திருப்பி விடப்படுவர்.

ஜோகூர் பாரு நோக்கிச் செல்லும் மற்ற தடங்களிலும் வாகனங்கள் நடுத்தடம் அல்லது வலத்தடத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.

தாங்கிகளை நீக்கும் பணியின்போது, உட்லண்ட்சில் சிங்கப்பூர் நோக்கி வரும் தடம் ஏறக்குறைய 200 மீட்டர் நீளத்திற்கு மூடப்படும். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகள் வலப்பக்கமாகத் திருப்பி விடப்படுவர். உட்லண்ட்சுக்கு வரும் மற்ற தடங்களிலும் வாகனங்கள் நடுத்தடம் அல்லது வலத்தடத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.

சாலையைப் பயன்படுத்துவோர் போக்குவரத்து அறிவிப்புப் பலகைகளில் உள்ள குறிப்புகளையும் தடம் மூடப்பட்டிருக்கும் வேளையில் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியின் வழிகாட்டுதலையும் பின்பற்றி நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம், சிங்கப்பூர் தரப்பில் ஆர்டிஎஸ் லிங்குக்கான உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளில் மூன்றில்-இரண்டு பங்கு நிறைவுபெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டு டிசம்பரில் பயணிகளுக்கு அது திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியத் தரப்பில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, திட்டப் பணிகள் 65 விழுக்காடு நிறைவுபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here