ஈப்போ:
முஅல்லிமில் வெள்ளம் காரணமாக வாஸ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு நிலவரப்படி 32 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேராக உயர்ந்துள்ளது என்று பேராக் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.
கம்போங் கெத்தயோங், கம்போங் லியோனார்டோ, கம்போங் பெரோப் மற்றும் கம்போங் கெலவார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் செக்கோலா மெனெங்கா கேபாங்சான் கிர் ஜோஹாரி, தஞ்சோங் மாலிம் இயங்கிவரும் தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
கம்போங் ஸ்ரீ பெஹ்ராங் மற்றும் கம்போங் பாவ் ஆகிய இடங்களில் இருந்து ஐந்து குடும்பங்களை உள்ளடக்கிய 26 பேர் PPS டேவான் கம்போங் பாவ் பெஹ்ராங் ஸ்டெசனில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், “சுங்கை பேராக், சுங்கை குராவ், சுங்கை கெரியான் மற்றும் சுங்கை பெர்னாம் ஆகிய இடங்களில் உள்ள ஆறுகள் அபாயகரமான நீர் மட்டத்திலுள்ளன ” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிலாங்கூரில், உலு பெர்னாம், உலு சிலாங்கூரில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த 113 பேர் நேற்று பிற்பகல் வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் உதவி இயக்குனர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார.