டாக்கா:
வங்கதேச எழுத்தாளரும், நோபல் அமைதிப்பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று வங்கதேச மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், ராணுவம் தலையிட வேறு வழியின்றி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அந்நாட்டில் இருந்து தப்பி, இந்தியா வந்துள்ளார்.
அந்நாட்டின் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுவிட, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றிய பல்வேறு அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. இந் நிலையில், நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளரும், கிராமிய வங்கி தொடங்கியவருமான முகமது யூனுஸ் இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
வங்கதேசத்தில் ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் எழுத்தாளர் முகமது யூனுஸ்(84). அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர். வங்கதேச நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை இவரே அரசை ஏற்று நடத்த வேண்டும் என்று மாணவர் இயக்க பிரதிநிதிகள் நஹித் இஸ்லாம், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜூம்தார் வீடியோ ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ஷேக் ஹசீனா , தமது பிரதமர் பதவியில் இருந்து விலகும் முன்பு அந்நாட்டில் நடந்த அரசியல் சூழல்கள், காய் நகர்த்தல்கள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு; வங்கதேச மாணவர்கள் இயக்கங்களின் போராட்டம் கலவரம், தீ வைப்பு, உயிர்பலி என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி வலுவாக நகர ஆரம்பிக்க, ஹசீனாவுக்கு நெருக்கடி முற்றியது. தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களிடம் விளக்க வேண்டும் என்று ஹசீனா விரும்பி இருக்கிறார்.
அதற்கு ஏற்ப நாட்டைவிட்டு வெளியேறும் முன்பாக தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றவும் அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் ராணுவ வட்டாரத்தில் ஹசீனாவுக்கு எதிராக மற்றும் ஆதரவாக இரு அணிகள் இருந்துள்ளது. குறிப்பாக, இளம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் 60 பேர் அவரின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
எதிர்ப்பு அணியினர் ஹசீனாவின் முடிவை ஒப்புக் கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. மாணவர்கள் போராட்டத்தின் போது அவர்களை தடுத்து நிறுத்த மாட்டோம் என்று ஹசீனாவிடம் ஞாயிறன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. திங்கள்கிழமை காலை 9 மணி வரை நிலைமை கட்டுக்குள் இருந்த நிலையில், அதன் பின்னர் காசிப்பூர் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகர் டாக்கா நோக்கி முன்னேற ஆரம்பித்தனர்.
போராட்டக்காரர்களை ராணுவம் கட்டுப்படுத்தாமல் இருந்ததால் நிலைமை தலைகீழாக மாறிவிட, அவரின் தொலைக்காட்சி உரை என்ற முயற்சியும், திட்டமும் எடுபடாமல் போனது. 45 நிமிடங்களில் நாட்டைவிட்டே வெளியேறி விட வேண்டும் என்று ராணுவமும் கடும் நெருக்கடியை முன் வைக்க என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து இருந்திருக்கிறார்.
வேறு வழியின்றி உடனடியாக அவர், தமது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அதன் பின்னரே ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு, இடைக்கால ஆட்சிக்கான அறிவிப்பும் வெளியானது. அடுத்து என்ன நடக்கும் என்பது உறுதியாக கணிக்க முடியாத நிலையில் வங்கதேசத்தின் அரசியல் நிலைமைகளை உலகின் மற்ற நாடுகள் உன்னிப்பாக உற்றுப்பார்க்க ஆரம்பித்து உள்ளன.