பெட்டாலிங் ஜெயா:
மலேசியாவில் இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, டிங்கி காய்ச்சலால் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தது.
டிங்கி பாதிப்பு மோசமடைந்ததற்கு வானிலையும் ஒரு காரணம் என்று சுகாகர அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி நிலவரப்படி, மலேசியாவில் 92,420 பேர் டிங்கியால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் சிலாங்கூர் மாநிலம் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மாநிலத்தில் 47,398 பேர் டிங்கியால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதற்கடுத்து, ஜோகூரில் 9,983 பேரும் தலைநகர் கோலாலம்பூரில் 8,392 பேரும் டிங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக வானிலைக்கும் டிங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருப்பதாக கடல், புவி அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியிர் அஸிஸான் அபு சமா தெரிவித்தார்.
“வெப்பநிலைக்கும் டிங்கி பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மழைக்காலத்துக்குப் பிறகு டிங்கியைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, மலேசியாவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை உச்சம் எட்டும். இதன் காரணமாக, டிங்கியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்,” என்றார் அவர்.








