மாநகராட்சி மன்றத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சாலேஷா முஸ்தபா அவர்களிடம் முன் வைத்துள்ளது .
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கூட்டரசு பிரதேச அமைச்சருடன் நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மோகனன் பெருமாள் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். டாத்தாரான் மெட்டேக்கா அருகில் உள்ள மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை என்ற தகவலை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
அந்த நூலகத்தில் சீனப் புத்தகங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருப்பது போல, தமிழ் புத்தகங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்தார். அங்கு நூல் நிலையம் அமைவதற்கான தொடக்கத்தை மேற்கொள்ள முதற்கட்டமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 100 புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கும்.
அடுத்தாண்டு முதல் மாநகராட்சி மன்றம் தனது பட்ஜெட்டில் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மாநகராட்சி மன்ற நூல் நிலையத்திற்கு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நூறு நூல்களை வழங்கும் முதற்கட்ட பணியின் அடையாளமாக அந்தச் சந்திப்பில் 10 புத்தகங்களை கூட்டரசு பிரதேச அமைச்சரிடம் சங்கம் ஒப்படைத்து.
நாம் முன்வைத்து கோரிக்கைகளை மிகவும் கவனமாகவும் அக்கறையுடனும் குறிப்பெடுத்துக் கொண்ட அமைச்சர், உடன் வந்திருந்து அதிகாரிகளிடம் அந்த நூல் நிலையத்தில் சீனப் புத்தகங்கள் இருக்கின்றனவா என்று கேட்டார். உடன் இருந்த அதிகாரிகள் ஆம் இருக்கிறது என்று பதில் அளித்தனர். நாம் கொடுத்த மகஜரை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்த அமைச்சர் உரிய நடவடிக்கை செய்கிறேன் என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தார்.
கூட்டரசு பிரதேச அமைச்சருடனான சந்திப்பில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாளுடன் பொதுச் செயலாளர் குமாரி சாந்தா காளியப்பன், பொருளாளர் முனியாண்டி மருதன், அயலகக்குழுப் பொறுப்பாளர் இராஜேந்திரன், செயலவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாண்டியன், மலர்க்கொடி, எழுத்தாளர் வனிதா இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, நாட்டில் உள்ள எல்லாப் பொது நூல் நிலையங்கள், உயர்க்கல்விக் கூடங்களில் உள்ள நூல் நிலையங்களில் தமிழ்ப்புத்தகங்கள் உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். எல்லா நூல் நிலயங்களும் தமிழ்ப்புத்தகங்கள் வாங்கும் நிலையை உருவாக்கி விட்டால் எழுத்தாளர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் தங்களது எழுத்துக்களைப் புத்தகமாக்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
தற்போது படைப்பாளனின் பணி படைப்பதாக மட்டும் இல்லை. தனது படைப்பை விற்பனை செய்யும் பணியையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தச் சூழல் படைப்பாளனைச் சோர்வடைய செய்கிறது. நூலகங்களில் தமிழ்ப்புத்தகங்கள் இடம் பெறுவதை உறுதி செய்யும் அதேவேளையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் தொடர்ந்து எழுதுவதற்கான போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்ற படைப்புகளைச் சங்கமே புத்தகமாக தொகுக்கும் திட்டத்தை வகுத்துச் செயல்பட்டு வருகிறேன்.
நாட்டில் உள்ள வாசக அமைப்புகளுடன் ஒரு சந்திப்பு நடத்தி, வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கலந்தாலோசனை நடத்தப்படும் என்று மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.