இந்திய தொழில்முனைவோர் சமுகத்தின் உயர்வுக்கு வணக்கம் மடானி என்ற ஒரு புதிய பயிற்சி திட்டத்தை தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.
தம்முடைய அமைச்சின் கீழ் செயல்படும் தெக்குன், அமானா இக்தியார் மலேசியா, எஸ்எம்இ கார்ப் ஆகிய ஏஜென்சிகளின் ஒத்துழைப்போடு இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
இத்திட்டத்தில் தொழில்முனைவோர், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, நிதி நிர்வாகம் உட்பட பல்வேறு துறைகளில் இந்திய இளம் தொழில்முனைவோர், பெண்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் மைக்கி ஆண்டுப் பொதுக் கூட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை அமைச்சு, மைக்கி, அரசு சாரா இயக்கங்கள் ஆகியவற்றின் வியூக ஒத்துழைப்பில் இப்பயிற்சி நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமுகத்தின் இளம் தொழில்முனைவோர், மகளிர் ஆகிய தரப்பினர் இத்துறைகளில் ஆழமான ஆளுமையை பெறுவதற்கு இப்பயிற்சி உதவும் என்று டத்தோஸ்ரீ ரமணன் தொடர்ந்து கூறினார்.
இந்திய சமுதாயத்தின் எதிர்கால மேம்பாட்டிற்காக டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்திருக்கும் ஐந்தாவது திட்டம் தான் ‘வணக்கம் மடானி’. இதற்கு முன்னதாக ஸ்பூமி கோஸ் பிக், பெண், பிரிஃவ்-ஐ, ஐ பாப் ஆகிய நான்கு வகை நிதி திட்டங்களை அவர் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.