புரட்டாசி மாதம் என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பெருமாள் ஆலயங்கள் என்றால் அது மிகையாகாது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விஷேசமானது. அந்த வகையில் தென்கிழக்காசிய திருப்பதி என்று போற்றப்படுவதும், மலேசியாவின் முதல் கருங்கல் ஆலயமுமான கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடந்தேறியது. தமிழகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் வேத விற்பனர்களின் ஏற்பாட்டில் புரட்டாசி சனிக்கிழமை விழாவை சிறப்பாக நடந்தேறியது.
தற்பொழுது பலருக்கு அதிக வேலை பளு காரணமாக ஆலயங்களுக்கு வருவது குறைந்து வருகிறது. ஆனால் நமது சமயத்தை நமது பிள்ளைகளுக்கு கற்று தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும் என்று ஆலயத்தலைவர் சங்கபூஷண் சித.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார். நமது சமயம் குறித்து விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு தெளிவாகவும் அவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு விரிவாகவும் தெரிந்து கொள்ள வைக்க வேண்டியது நமது கடமையாகும்.
அதனால் உங்கள் பிள்ளைகளை ஆலயங்களுக்கு அழைத்து வாருங்கள். மேலும் சமய வகுப்புகளில் உங்கள் பிள்ளைகளை சேருங்கள். சமயமும் தாய்மொழியும் நமது இரு கண்களை போன்றது என்று ஆலயத்தலைவர் தெரிவித்தார்.