* உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால், தனக்கும் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் முரண்டு பிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், துணை முதல்வர் பதவி வழங்கினால், தன்னிடம் உள்ள கனிமவள துறையை துரைமுருகன் விட்டுக் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அந்த துறையை விட்டுக் கொடுக்க அவர் முன்வராததால், துணை முதல்வர் பதவி தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், துரைமுருகன் ஏமாற்றம் அடைந்துள்ளார்
* சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது, அவரது பதவியை பறிக்க வைத்தது. கவர்னருடன் இணக்கமாகச் செயல்படாததால், பொன்முடியிடம் இருந்த உயர் கல்வித்துறை பறிக்கப்பட்டு, வனத்துறை தரப்பட்டுள்ளது
* முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மஸ்தான் பதவி பறிபோகும் பட்சத்தில், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் வஹாப் எதிர்பார்த்தார். திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், சபாநாயகர் அப்பாவுவும் அமைச்சர் பதவி பெற தீவிரமாக காய் நகர்த்தினார். ஆனாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை
* தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லை என்றும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த எம்.எல்.ஏ.,க்களில் சங்கரன்கோவில் ராஜாவும் ஒருவர்.
* கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பெரம்பலுார், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என, அம்மாவட்ட உடன்பிறப்புகளும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.